Sunday, October 18, 2009

‘ஈழம் காத்த தானைத் தலைவன் ராஜபக்சே-...’திருமா வழங்கும் புதிய பட்டம்?

திருமாவளவன் அவர்களே
வணக்கம் சொல்ல விருப்பமில்லை. நாங்கள் முகமன் கூறும் தகுதியை நீங்கள் இழந்து வெகு நாட்கள் ஆகின்றன. இந்தக் கடிதமும் நீங்கள் மனம் மாறுவீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதப்படவில்லை. ஏனெனில், மூடநம்பிக்கைகளை ஒழிக்கப் புறப்பட்டவன் எங்கள் பாட்டன். அவன் வழியில் நடப்பவர் நாங்கள்.

கசாப்புக் கடைக்கு இழுத்துச் செல்லப்படும் ஆடு, அரிவாள் தன் கழுத்தில் இறங்கும் வரை தன்னை வளர்த்தவன் மீது நம்பிக்கை கொண்டு அவன் முகத்தைப் பார்த்தபடியிருக்குமே...அதுபோல் எங்கள் மக்களில் ஒரு பெருந்திரள் உங்கள் மீது இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளது. அவர்களுக்கு உங்கள் முதுகில் மறைந்திருக்கும் அரிவாளைக் காட்டவே இக் கடிதம்.

’அடங்க மறு; அத்து மீறு’ என்ற கட்டளைகளுடன் தாழ்த்தப்பட்ட மக்களின் சம உரிமைக்காக அரசியல களம் கண்ட நீங்கள், 2000ஆம் ஆண்டு தேர்தல் அரசியலில் நுழைந்தீர்கள் என்பது உங்களை நம்பும் அப்பாவிகளிடம் நீங்கள் காட்டும் வரலாறு.

ஆனால்...உண்மையில் இதை இப்படிச் சொல்ல வேண்டும்:
’தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் ஆதிக்க சாதி வெறி பிடித்த கும்பலின் தலைவருமான...குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் பகைவரான கருப்பையா மூப்பனார் உங்கள் கட்சிக்கு நல்ல விலை கொடுத்து வாங்கிய சம்பவம் அது’

இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா?
எந்த மூப்பனார்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் வாயில் சாணிப்பால் கரைத்து ஊற்றினார்களோ...எந்த மூப்பனார்கள் இன்று வரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தேநீர்க் கடைகளில் இன்று வரை தனிக்குவளை வைத்திருக்கிறார்களோ...எந்த மூப்பனார்கள் தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களை பறித்துக்கொண்டார்களோ...அந்த மூப்பனார்களின் தலைவர்தான் கருப்பையா மூப்பனார் என்பதை நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்!
மூப்பனார்களுக்கெதிராகவும் வன்னியர்களுக்கு எதிராகவும் நீங்கள் முழங்காத கிராமங்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திலும் கடலூர், வட ஆற்காடு மாவட்டங்களிலும் குறைவு.

ஆனால்...அதெல்லாம் நீங்கள் தேர்தல் சாக்கடையில் இறங்கி புழு பிடித்துத் தின்னத் தொடங்கியதற்கு முன்பு.

’ஐயா...மூப்பனார் அவர்கள் சமூக நீதி காத்த தலைவர்’
-இது நீங்கள் கருப்பையாவுக்குக் கொடுத்த பட்டம்தான்! சிதம்பரம் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இப்படிப் பேசினீர்கள்.

அதன்பிறகு...ஆதிக்க சாதி கருப்பையா...சமூக நீதி காத்த தலைவர் மூப்பனார்’ என்று அழைக்கப்பட்டார். எல்லாம் உங்கள் ஆசீர்வாதம்தான்.
’வன்னியர்கள்தான் வட மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டவரின் முதல் எதிரி!’
-என்ற அறைகூவல் உங்களுக்கு நினைவிலிருக்க நியாயமில்லை.
ஆனால்...
உங்கள் உசுப்பேற்றுதல்களால்...அடங்க மறுத்து அத்து மீறி வன்னியர்களுடன் மோதி கை கால்களை இழந்த பல நூறு தாழ்த்தப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு அந்த அறைகூவல் மறந்திருக்காது. சாதி மோதல்களில் இறந்தே போன தாழ்த்தப்பட்ட தோழர்களின் குடும்பங்கள்,
நீங்களும் மருத்துவர் ராமதாசும், வன்னியர் சங்கத் தலைவர் குருவும் கை கோர்த்து நடப்பதையும் தொலைக்காட்சி செய்திகளில் சிரிப்பதையும் பார்க்கும்போது மனதுக்குள் என்ன நினைப்பார்கள் என்று என்னைப் போன்ற சாமானிய மனிதனுக்குத் தெரியும்.
உங்களைப் போன்ற தலைவர்களுக்குத் தெரியுமா?

’வட மாவட்டங்களில் இருந்த சாதி மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்ததே எங்கள் அரசியல் கூட்டணிதான்’
-என்று நீங்களும் ராமதாசும் எத்தனையோ முறைகள் அறிவித்திருக்கிறீர்கள்.

அடடா...
சாதிச் சிக்கலை நீங்கள் இருவரும் எவ்வளவு எளிதாகத் தீர்த்துவிட்டீர்கள்!



வட மாவட்டங்களில் வன்னியர்கள்தான் இன்று வரைக்கும் ஆதிக்க சாதியாக நீடிக்கிறார்கள் என்பதும், பாமக, தேமுதிக, ஜெகத்ரட்சகன் ஆகிய அரசியல் காரணிகள் வன்னிய ஆதிக்கத்தை முன்னைக் காட்டிலும் வலுப்படுத்தியுள்ளன என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்!

ஏனெனில்...தேர்தல் கூட்டணி அமைப்பதே சாதி மோதலைத் தவிர்க்கும் வழி என்ற புதிய கோட்பாட்டைக் கண்டுபிடித்தவராயிற்றே நீங்கள்!

இன்றும்...வட மாவட்டங்களில் தேர்தல் பதவிகள்...எம் எல் ஏ முதல் கவுன்சிலர் வரை வன்னிய சாதியினரே ஆதிக்கம் செய்கின்றனரே...

வட மாவட்டங்களில் வாண்டையார்கள், ரெட்டியார்கள், வன்னியர்கள் உள்ளிட்ட ஆதிக்க சாதியினர் ஆகப் பெரும்பான்மையான நிலங்களை வைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களை வெறும் கரும்பாலைக் கூலிகளாகவும் விவசாயக் கூலிகளாகவும் வைத்திருக்கின்றனரே...

விழுப்புரம், பண்ருட்டிப் பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் அலை அலையாகக் கிளம்பி...தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கரும்பு வெட்டும் கூலிகளாகப் போய்க்கொண்டிருக்கின்றனரே...

கரும்பு வெட்டப் போகும் தாழ்த்தப்பட்ட மக்களின் அவலங்களில் முக்கியமானது...அவர்கள் மாதக் கணக்கில் வெளி மாவட்டங்களில் தங்க வேண்டியிருப்பதால் குடும்பத்தோடு மனைவி மக்கள் குழந்தைகள் என அனைவரையும் அழைத்துச் சென்று...கூடாரங்கள் அடித்துத்தான் தங்குகின்றனர்.

இது போன்ற சூழல்களில் அடித்தட்டுப் பெண்களும் குழந்தைகளும் எவ்வளவு மோசமாக சுரண்டப்படுவார்கள் என்று எங்களைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

உங்களைவிட...’விளிம்பு நிலை’ வித்தகர் உங்கள் சாணக்கியர் ரவிக்குமாருக்கு மிக மிக நன்றாகத் தெரியும்.

இப்படிப் பிழைப்புக்காக...குடும்பங்களோடு அலையும் மக்களை உலகம் ‘நாடோடிகள்; ‘உள் நாட்டு அகதிகள்’ என்றெல்லாம் அழைக்கிறது.

நீங்கள் இவர்களுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள் திருமா?

‘மாண்புமிகு வாக்காளப் பெருமக்கள்’-என்றுதானே?

நீங்களும் ராமதாசும் வைத்துக் கொண்டுள்ளது பிழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை. அதைக் கூட்டணி என்று நீங்களும் உங்களைப் போன்றவர்களும் அழைப்பீர்கள்.

சாதி சமத்துவத்திற்கும் உங்கள் பிழைப்புவாதப் புரிந்துணர்வுக்கும் யாதொரு உறவும் இல்லை.

தமிழக அரசியலில் ...தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியலில் உங்கள் சாதனைகள் இவைதான்.

இதோடு நீங்கள் நிறுத்தியிருக்கலாமே...!

தமிழீழ மக்களையும் விடுதலைப் புலிகளையும் கூடவா விற்றுப் பிழைக்க வேண்டும்?

இனத்தை அழிக்கும் காங்கிரசுக்கு எதிராகத் தமிழ்நாட்டின் கணிசமான இயக்கங்களும் தேர்தல் கட்சிகளும் தீவிரமாக வேலை செய்தபோது...காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தீர்கள். இது முதுகில் குத்திய பாவம் என்பதை உங்கள் மூளையின் ஒரே ஒரு செல் கூட உரைக்கவில்லையா?

இப்போது வன்னி முகாம்களுக்கு நீங்களும் உங்கள் புதிய கூட்டாளிகளும் இன்பச் சுற்றுலா போனபோது, அங்கே கதறிய மக்கள் முகங்களைப் பார்த்தபோது ஒரே ஒரு கணம் கூட...
‘இந்த முள்வேலி வாழ்க்கைக்கு நானும்தான் ஒரு காரணம்’
என்ற உண்மை மின்னல் போலவேனும் வந்து போகவில்லையா?

அப்படி எந்த நியாய உணர்வும் உங்களுக்கு இல்லை என்பதை உங்கள் பேட்டிகள் நிறுவுகின்றன.

ராஜபக்சே உங்களைப் பார்த்து ‘நல்ல வேளை கடைசி நேரத்தில் நீங்கள் பிரபாகரனோடு இல்லை. ஒருவேளை இருந்திருந்தால்...நீங்களும் காணாமல் போயிருப்பீர்கள்’ என்று எள்ளி நகையாடிய சேதியை இணையத்தில் படித்துவிட்டு உளம் கொதித்தோம்.

ஆனால்...அந்த கிண்டலைக் கேட்ட பிறகும் நீங்கள் ராஜபக்சேவுடன் உரையாடி மகிழ்ந்து...எந்தக் கணத்திலும் அவன் மனம் சுருங்காமல் நடந்துகொண்டீர்கள்.

வெளியே வந்ததும் பத்திரிகையாளர்கள் இதைப் பற்றிக் கேட்டபோது,
‘அது ஒரு ஜோக்...அவர் தமாசுக்கு அப்படிச் சொன்னார்’ என்று அதே உங்கள் பிராண்ட் அசட்டுச் சிரிப்பு சிரித்தீர்களே.

கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் போனது எப்படி?
சுய மரியாதை என்ற உணர்வு சில பிராணிகளுக்குக் கூட உள்ளது என்கிறது விஞ்ஞானம். ஆனால்...உங்களுக்கு அது அறவே இல்லாமல் போனது எப்படி?

எழு இனி நெஞ்சம் செல்க யாரோ
பருகுஅன்ன வேட்கை இல்வழி’
-என்ற புறநானூறுப் பாடல் பெருஞ்சித்திரனார் எனும் மானமுள்ள புலவர் இயற்றியது.

இளவெளிமான் எனும் மன்னனைச் சந்தித்துப் பரிசில் பெறச் சென்றார் பெருஞ்சித்திரனார். அம்மன்னன் அவருக்குப் பரிசில் அளித்தான். ஆனால் அந்த நேரத்தில் மன்னன் முக பாவம் சரியில்லை.
இதைக் கண்ட பெருஞ்சித்திரனார்,
’உள்ளம் மகிழ்ச்சி அடையாமல், முக மாற்றம் அடைந்து பரிசில் அளித்தால்...மானமுள்ளவர் அதை ஏற்கமாட்டார். எப்படிக் கொடுத்தாலும் வாங்குபவர் உளர். ஆனால்...நான் அப்படிப்பட்டவன் அல்ல.
இந்த உலகம் பெரிது. நான் வேறிடம் செல்கிறேன்’
-என்று பாடிவிட்டு வெளி நடப்பு செய்தார்.

பரிசில் பெறச் சென்ற புலவரே மன்னனின் முகம் பார்த்து செருக்குடன் பரிசில் வாங்காது சென்ற மரபு நம் மரபு.

நீங்கள் சென்றது இனத்தின் எதிரியான ராஜபக்சேவின் விருந்தினராக. அவன் உங்களைப் பார்த்துப் பேசிய கிண்டல் சொற்கள் உங்களைப் பற்றியது மட்டுமல்ல; தமிழீழத் தேசியத் தலைவரையும் குறித்தவை.

ஆனால்...உங்களுக்குக் கொஞ்சமும் .............இல்லாமல் பல்லிளித்துவிட்டு வந்தீர்கள்.
அவன் கேலி பேசிய மறு கணமே...அந்த இடத்திலிருந்து வெளிநடப்பு செய்ய வேண்டும் என்று ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை?

அதைக் காட்டிலும், ஜூனியர் விகடனில் நீங்கள் அளித்துள்ள நேர்காணலில்,
’ராஜபக்சே தன் வக்கிரங்களைத் திரட்டி அந்த வார்த்தைகளைச் சொன்னார்’
என்று முழங்கி இருக்கிறீர்கள்.

சென்னை விமான நிலையத்தில் ’அது ஒரு ஜோக்’காகத்தானே தெரிந்தது உங்களுக்கு?
ஜூவியில் பேசும்போது மட்டும் எங்கிருந்து வந்தது கோபம்?

விடை எனக்குத் தெரியும்!

விமான நிலையத்தில் உங்கள் அருகில் உங்கள் எஜமானர்கள் – உங்களுக்குப் படியளப்பவர்கள்- டி ஆர் பாலு, கனிமொழி, காங்கிரஸ் எம்பிக்கள் இருந்தனர். அவர்களை வைத்துக் கொண்டு ராஜபக்சேயைத் திட்டும் துணிவும் செருக்கும்நேர்மையும் உங்களுக்கு இல்லை.

அதே வேளை தமிழீழ ஆதரவுக் கூட்டத்தை ஏமாற்றாமல் உங்களால் அரசியல் வியாபாரம் செய்ய முடியாது. அதனால்...பாதுகாப்பாக பதுங்கிகொண்டு பத்திரிகையாளரிடம் பேசும்போது எகிறி அடிக்கிறீர்கள்.

இது கருணாநிதி, ராமதாஸ் ஆகிய உங்கள் முன்னோடிகளிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்ட கலை.

ராஜபக்சே எனும் பக்கத்து நாட்டுக்காரனைக்கூட எதிர்க்கும் துணிவும் நேர்மையும் இல்லாத நீங்கள்...தங்களை சாதி ஆதிக்கப் பிடியிலிருந்து விடுவிப்பீர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறதே பாவப்பட்ட இளைஞர் கூட்டம். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

மூப்பனார் சமூக நீதி காத்த தலைவர் ஆனது போல...
ராஜபக்சேவுக்கு என்ன பட்டம் தரலாம் என்று யோசித்து வையுங்கள்...
‘ஈழம் காத்த தானைத் தலைவன் ராஜபக்சே...’
எப்படி இருக்கிறது...?




நாக்பூரில் உள்ள புத்த மடத்தில் புத்தனை வணங்கும் திருமா...
வன்னி சென்றபோது சிங்கள வெறிப் படையினரால் இடிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் இருந்த இடங்களையாவது பார்வையிட்டாரா...?

ஒருவேளை அவர் விரும்பினாலும் அவரைச் சுற்றுலாவுக்குக் கூட்டிச் சென்ற அவர் எஜமானர்கள் விட்டிருக்க மாட்டார்கள்!

2 comments:

  1. மிக நல்ல எழுத்து.
    உங்கள் ஆக்கங்களை தொடர்த்து படித்து வருகிறேன். பாராட்டுக்கள்
    -ஆதவன்

    ReplyDelete