Friday, November 20, 2009

உங்களுக்கு மீன் புடிக்குமா…? ஐயோ பாவம்…!

‘பந்தியிலயே இடமில்லன்னாச்சாம்…ஒருத்தன் இலை பிஞ்சிருக்குன்னானாம்’னு எங்க அம்மாச்சி அடிக்கடி சொல்லும். இந்தப் பழமொழி எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னா…வெகு பேரு இப்படித்தான் நடந்துக்குவாய்ங்க. சமீபத்திய உதாரணத்தையே எடுத்துக்கோங்க.
இந்த மீனவருங்க இருக்காங்களே…இவங்கள்லாம் மீன் புடிக்கப் போனா சிங்களன் சுட்டுக் கொல்றானாம். இப்பல்லாம் சிங்களப் படகுல சீனாக்கார ஈ கண்ணனுங்களும் வர்றானுகளாம். (மூஞ்சிக்கு நேரா ஈ பறந்தா கண்ண சுருக்குவோமே அதே மாதிரியே சீனாக்காரங்க கண்ணு இருக்கறதால…எங்க ஊரு பாலக்கட்டையில கும்பலா குந்தி சிந்திச்சு வச்ச பேரு இது)

மீனவங்களுக்கு அறிவுன்னு ஒண்ணு இருக்கா இல்லலையான்னே தெரியல. அரசாங்கம் என்ன நினைக்குது? இவங்கள்லாம் மீனே புடிக்க வேணாம்னு நினைக்குது. அதாவது ஆணியப் புடுங்க வேணாம்!

அதைப் புரிஞ்சுக்காம அவன் சுடுறான் இவன் அடிக்கிறான்னு ஒப்பாரி வச்சா கேக்கறதுக்கே சிப்பு சிப்பா வரல? மீனவருங்கல்லாம் சரியாப் படிக்கிறதே இல்ல. அதான் அவங்க பிரச்சினை. நம்மளை மாதிரி ஹிண்டு, தந்தி, தினமலர், என் டி டி வி, டிஸ்கவரி, ஸ்டார் நியூஸ், சி என் என் னு பிரிச்சு மேய்ஞ்சா…கொஞ்சமாவது ஒலக அறிவு இருக்கும்.

நாமல்லாம் ஏதோ ஒரு கிராமத்திலயோ…சின்ன நகரத்திலயோ பிறந்தவங்கதானே…? நம்ம அப்பன் ஆத்தா விவசாயம் செஞ்சுக்கிட்டோ ஆடு மாடு மேச்சுக்கிட்டோ…ஆசாரியாவோ நெசவாளராவோ இது மாதிரி வேற ஏதாச்சும் தொழில் செஞ்சவங்கதானே…? இல்லன்னா நம்ம தாத்தா பாட்டியாச்சும் இந்த மாதிரி தொழிலுங்களைப் பார்த்திருக்கலாம். அரசாங்கம் பசுமைப் புரட்சின்னு ஒரு திட்டத்தைப் போட்டுச்சு.

அதுக்கு என்ன அர்த்தம்? வெவசாயம் ஆடு மாடு மேய்க்கறவங்கல்லாம் பொழப்ப வுட்டுட்டு ஓடுங்கடா…நிலத்தையெல்லாம் வெளிநாட்டு கம்பெனிங்களுக்கு விக்கப் போறோம்னு அரசாங்கம் பசுமைப் புரட்சி வெண்மைப் புரட்சிங்கற பேருங்கள வச்சு ஜிங்குசா ஜிங்குசான்னு சொன்னிச்சு. நாம எவ்வளவு கண்ணியமா கட்டுப்பாடா கடமை உணர்ச்சியோட ஊர விட்டுட்டு வந்து அலேகா…சென்னையிலயோ…பிட்ஸ்பர்க்லயோ பீட்சா தின்னுக்கிட்டிருக்கோம். இதானே மனுசப் பிறவிக்கு அழகு?

இந்த மீனவருங்களப் பாருங்க…கொஞ்சம் கூட நடைமுறை அறிவு இல்லாம எவன் சுட்டாலும் மீன் புடிக்கத்தான் செய்வோம்னு நிக்குறாங்க. அதான் நம்ம இந்தியா இப்ப வச்சிருக்கு ஒரு ஆப்பு…! மவனே…இதுலேருந்து மட்டும் தப்பவே முடியாது.

அதாவது…இந்திய மீன்பிடித் தொழில் ஒழுங்குமுறை ஆணையம் கொடுத்த ரோசனைகளை வச்சு இந்திய அரசாங்கம் இப்ப புதுசா ஒரு சட்டம் கொண்டு வரப் போகுது. அந்தச் சட்டம் மட்டும் வந்துட்டா…இந்த மீனவருங்கல்லாம் நம்மளை மாதிரி பொழப்பு தேடி வந்துதான் ஆகணும். மான ரோசம்தான் முக்கியம்னு முட்டாத்தனமா முடிவெடுத்தா கடல்ல வுழுந்து சாகணும்.

அந்தச் சட்ட முன் வரைவு என்ன சொல்லுதுன்னா…
• மீனவர்கள் எல்லாம் இனிமேல் மீன் பிடி உரிமம் (லைசென்ஸ்) வாங்கிப் பதிவு செய்துக்கணும்
• மீனவர்கள் தங்கள் விருப்பம் போல் மீன் பிடிக்கக் கூடாது. எந்த தேதியில என்ன வகை மீன் எவ்வளவு கிலோ பிடிக்கணும்னு அரசாங்கம் ஒவ்வொரு மீனவருக்கும் ஒரு பட்டியல் கொடுக்கும். அதன்படித்தான் பிடிக்கணும். சும்மா இஸ்டத்துக்கு புடிக்கக் கூடாது.
அதாவது, நான் வலை போட்ட எடத்துல சங்கரா மீனுதான் வந்துச்சுன்னு சாக்கு போக்கு சொல்லக் கூடாது. அரசாங்கம் நெத்திலி புடிக்கச் சொன்னா…கிடைச்ச சங்கராவை அப்புடியே கடல்ல கொட்டிட்டு…நெத்திலி தேடி வலை வீசணும். அதே மாதிரி 100 கிலோவுக்கு மட்டும்தான் பர்மிட்டுன்னா…வலையில 101 கிலோ வந்துட்டா…அந்த 1 கிலோ மீனையும் கடல்லயே நீச்சலடிக்க விட்றணும். வேணும்னா…இந்தக் கவலைகளை மறக்கறதுக்காக…கரைக்கு வந்து சரக்கடிச்சுட்டு சாயலாம். அதுக்கு பர்மிட் லிமிட் எதுவும் இல்ல.

• மீன் பிடிப் படகுகளைச் சோதனையிட இனிமே ஆபீசருங்க எங்க வேணா வருவாங்க. எப்ப வேணா வருவாங்க. அவங்களைப் பார்த்ததுமே…இந்தியன் பட கவுண்டமணி கணக்கா ‘குட் மார்னிங் ஆபீசர்’ னு சல்யூட் வச்சு எல்லாத்தையும் தெறந்து காட்டணும். இதுக்குப் பதிலா யாராச்சும் அந்த ஆபீசருங்களை அவமதிச்சா…6 லட்சம் ரூபா அபராதம்!
• அப்புறம் முக்கியமான விசயம்…இனிமே மீனவருங்கள்லாம் முன்ன மாதிரி திமிரெடுத்துப் போயி…இந்திய எல்லை வரைக்கும் போறேன் சர்வ தேச எல்லைக்குப் போறேன்ன்னு போகக் கூடாது. கரையிலருந்து 12 கடல் மைல் மட்டும்தான் போகணும். அதைத் தாண்டி ஒரு அடி வச்சாலும் 9 லட்ச ரூபா அபராதம், ஆறு மாசம் ஜெயிலு.
• வெளிநாட்டுப் படகுகள் மீன் புடிக்கிற கப்பலுங்கல்லாம் இப்ப இந்திய எல்லைக்கு வெளியேதான் நிக்கிது. பாவம்…எம்மாந்தூரம் வந்திருக்காங்க…அவங்களை அங்கேயா நிக்க வைக்கறது…? அதனால இனிமே அந்த வெளிநாட்டுப் படகுகளும் கப்பலுங்களும் இந்திய எல்லைக்குள்ளக் கூட வரலாம் மீன் புடிக்கலாம். அவங்களுக்கு எல்லையே இல்லை.
• மீனவருங்க மேற்படிச் சட்டத்தை மதிக்காதப்போவெல்லாம் அவங்களோட படகுங்களைப் புடுங்கலாம் வலையக் கிழிக்கலாம்.(மீனவர் பிரச்சினையில என்னத்தப் புடுங்கினீங்க? என்னத்தக் கிழிச்சீங்கன்னு எவனும் கேக்கக் கூடாதுன்னு இந்த ஏற்பாடு)

இது மாதிரி இன்னும் நிறைய ஆப்புங்க இருக்கு.
இந்தச் சட்டம் இப்ப பாராளுமன்றத்துல நிறைவேற்றப்படப் போவுது. இது மட்டும் சட்டம் ஆயிட்டா…மீனவருங்கல்லாம் உள் நாட்டு அகதிங்கதான்.

நமக்காச்சும் வித்துட்டுக் கஞ்சி குடிக்க நிலம் இருந்துச்சி… இருக்கு. மீனவருங்களுக்கு ஒரே சொத்து கடல்தான். இப்ப அதையும் மொத்தமா வழிச்சு எடுத்து பன்னாட்டுப் பரதேசிங்களுக்குக் கொடுத்தாச்சு. ஆக மொத்தத்துல மீனவர்கள் எல்லாரும் சென்னை கோவை மாதிரி நம்ம ரேஞ்சு நகரங்களுக்குக் கூலி வேலை செய்ய வந்துடுவாங்க.

பிளாட்பாரத்துலதான் தங்குவாங்க. நாம போறப்ப வர்றப்ப அந்த எடமே நாத்தமடிக்கும். என்னத்த பண்றது…? சகிச்சுக்கிட்டுதான் போகணும்.
‘சார்…கவர்மெண்ட்ல என்ன சார் பண்றான்…இந்த பிளாட்பாரத்துல நடக்க முடியுதா சார்…? நாஸ்டி பெலோஸ்…’னு கடுப்புல கத்துவோம்.

ஆனா…இதெல்லாம் கூட சகிச்சுக்கலாம். நாம மீன் சாப்பிடணுமே…அதுக்கு என்னா வழி…?

மெக் டொனால்ட் பிஸ் பிரை
ரிலையன்ஸ் பிஸ் க்ரேவி
டாடா பிரஸ் பிஸ்
-இப்படின்னு பல ப்ராண்டுகள் நமக்குக் கிடைக்கும் போங்க. என்ன…எல்லாம் டின்னுல அடைச்சு வரும். புடிச்ச தேதியிலருந்து 6 மாசம் வரைக்கும் பயன்படுத்தலாம்னு தெளிவா எழுதியிருப்பான். மீன் சந்தையில மீன் வாங்கறப்போ…புது மீனான்னு பாக்க மீனோட செவுளத் தூக்கிப் பார்ப்போமே…அது மாதிரியெல்லாம் பார்க்க முடியாது. பார்த்தா சூப்பர் மார்க்கெட் செக்யூரிட்டியே நம்ம செவுளை செவக்க வச்சிடுவாரு.


வெலை…?
1 கே.ஜி- சங்கரா பிஸ் – 515.90 ருபீஸ் (லோக்கல் டேக்ஸஸ் எக்ஸ்ட்ரா)

நமக்கு இதென்ன புதுசா…?
நாட்டுக் கோழி வளர்த்தா வாசல்ல எச்சம் போடும்னு அருவருப்புப்பட்டுக்கிட்டு…கோத்ரெஜ் சிக்கன், கெண்டகின்னு விதவிதமா தின்னுப் பழகினவங்கதானே!

விவசாயிகளை ஒழிச்சாச்சு, நெசவு, நகைத் தொழிலாளர், ஆடு மாடு வளர்த்தவங்கன்னு சகல தமிழ் குழுக்களையும் ஓட ஓட விரட்டி அடிச்சாச்சு. கிராமங்கள்ல நோக்கியா, மிச்சலின், டாடா கம்பெனிகள் மின்வேலி போட்டு கும்மியடிக்குது.

மிச்சம் இருந்தது மீனவருங்கதான். அவங்களையும் அடிச்சி விரட்டத்தான் இந்த சட்டம் வருது.
ஆனா…இதெல்லாம் நம்ம பிரச்சினைங்க இல்ல. இதுக்காகவெல்லாம் கவலைப்பட நாம என்ன ஊர் மாக்கானுங்களா…?
நாம நிலத்தை வித்துப் படிச்சதே ஊரைவிட்டு ஓடத்தானே…!
இப்படிச் சொல்றதுக்காக எம் மேல கோவம் கூட வரும். ஆனா...நான் ஏன் இதச் சொல்றேன்னா...மீனவருங்களுக்கு இன்னிக்குத்தான் ஆப்பு விழுவுது. மலைவாழ் மக்களுக்கு என்னிக்கோ வுழுந்துடுச்சு. அப்பல்லாம் நாம என்ன செஞ்சோம்னு யோசிச்சுப் பாருங்க.

நாம நம்ம மண்ண நேசிச்சிருந்தா...என்ன படிச்சாலும் என்ன வேலை செஞ்சாலும் ஊர்ல இருக்கற தம்மாத்தூண்டு நிலத்துல ஏதாச்சும் விதைச்சு அறுத்துக்கிட்டிருந்திருப்போம். ஆனா...நாம என்ன செஞ்சோம்?
படிக்க, காது குத்த, குடிக்க, கல்யாணத்துக்கு, வேலை வாங்க மாமூலுக்கு...இப்படி டைப் டைப்பான காரணங்களுக்காக நிலத்த வித்தோம்.

இன்னிக்கு சொந்த ஊர் எதுன்னு கேட்டா நம்ம வாரிசுங்க...திரு திருன்னு முழிக்குதுங்க. அரசியல், கம்யூனிசம், புரட்சி புண்ணாக்கு...இதெல்லாம் இருக்கட்டும் சாமீ...அவனவன் ஊர்ல அவனவனுக்குன்னு நாலு காணி நிலம் இருக்கணும்னு யாருக்குமே தோணாம போச்சே...

நம்மல்லாம் இப்புடி சொந்த செலவுல சூன்யம் வச்சுக்கிட்டதப் பார்த்துதான் அரசாங்கங்களுக்கு தெனாவட்டு வந்திருக்கு...இப்ப மொத்த கடலையும் பன்னாட்டுப் பன்னாடைங்களுக்கு எழுதி வச்சிட்டாய்ங்க.

ஆக...மீனவருங்க வடிக்கற கண்ணீருக்கு அவங்க மட்டுமே காரணமில்ல...நாமளும்தாங்கறது என்னோட விசனம்...
நீங்க என்னா நெனைக்கறீங்க...?