Saturday, February 27, 2010

பட்டினிச் சாவின் முன்னறிவிப்பு!

நெல் விவசாயம் ஒரு காலத்தில் ஆற்றுப் பாசனத்தில் மட்டும் அதிகம் மேற்கொள்ளப்பட்டது. அதுவும், மூன்று போகங்களும் நெல் பயிரிடாமல் கேழ்வரகு, கடலை, எள், உளுந்து, பயறு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் கலந்த வேளாண்முறை இருந்தது. இதனால், எந்தக் குறிப்பிட்ட பயிரும் மிகையாக உற்பத்தி செய்யப்படாமல், உற்பத்தி அளவு கட்டுக்குள் இருந்தது. மேலும், பலவகைப் பயிர்கள் உணவுக்குக் கிடைத்ததால் மக்களது உணவுப் பழக்கம் சீராகவும் சத்துள்ளதாகவும் இருந்தது.

குறிப்பாக, கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச் சத்து அதிகம் உள்ள அரிசியை அளவோடு உண்டு நலமாக வாழ்ந்தனர் நம் மூத்த தலைமுறையினர்.

புன்செய் எனப்படும் ஆற்றுப்பாசனமில்லா நிலப்பகுதிகளில் கம்பு, கேழ்வரகு, வரகு, சோளம் (வெள்ளைச் சோளம், காக்கா சோளம், முத்துச் சோளம்), சிலவகை நெல் வகைகள் – மட்டை நெல் அல்லது சிவப்பரிசி நெல், மாப்பிள்ளைச் சம்பா, குச்சி நெல், மடுமுழுங்கி உள்ளிட்டவை- கடலை, உளுந்து, துவரை, எள், காய்கறிகள் – அதிகம் நீர் தேவைப்படாத வகைகள் – உள்ளிட்ட பல்வேறு விதமான பயிர்கள் புன்செய் நிலப்பரப்பில் விளைவிக்கப்பட்டன.

பசுமைப் புரட்சி என்ற ஊழல் புரட்சி ’உணவுத் தட்டுப்பாடு’ என்ற பொய்யைக் கூறியது. அரிசி மட்டும்தான் உணவு என்று அவர்களாகவே முடிவு செய்துவிட்டு, அரிசியின் உற்பத்தி அளவு போதாமையில் உள்ளது என்றனர். இதற்காக அவர்கள் அள்ளி விட்ட புள்ளி விவரப் புளுகு மூட்டைகள் கணக்கிலடங்காதவை.

இதன் விளைவாக, நெல் பயிரிடுவதற்கு அரசும் பன்னாட்டு நிறுவனங்களும் பல்வேறு ஊக்கத்திட்டங்களை அறிவித்தனர்.

• புதிய – வீரிய நெல் வகைகள் கண்டுபிடிப்பு
• இரசாயன உரங்கள் அறிமுகம்
• பூச்சிக் கொல்லிகள், களைக் கொல்லிகள் அறிமுகம்
• நெல்லுக்குக் கூடுதல் விலை
• அரிசி உண்பதே உயர்ந்தது எனும் மறைமுக உளவியல் பிரசாரம்
• நெல் பயிரிட்டால் கடன் வசதி (இப்போதும் விவசாயக் கடன் நெல் விவசாயத்துக்கே வழங்கப்படுகிறது / முன்னுரிமை வழங்கப்படுகிறது-நானே வாங்கியுள்ளேன்!)
• நெல் கொள்முதலுக்கு அரசு பொறுப்பேற்பு
• பிற தானியங்களைப் புறக்கணித்து ஒழித்தல்
-என பல நடைமுறைகள் வழியாக நெல் பயிரிடலை அதன் தேவைக்கும் திறனுக்கும் சற்றும் பொருந்தாத முறையில் அதிகப்படுத்தியது பசுமைப் புரட்சி.
விளைவு...
ஆற்றுப் பாசன விவசாயிகள் நெல் தவிர வேறு பயிர் செய்ய இயலாதவர்களாக மாறிவிட்டனர். ஆடு, மாடு, கோழி வளர்க்கக் கூட நிலம் இல்லாத வகையில் எங்கு பார்த்தாலும் நெல் வயல்கள்!
பல ஊர்களில் குறிப்பிட்ட காலத்திற்கு ஆடு வளர்க்கத் தடையே உள்ளது. ஆற்றுப் பாசன ஊர்கள் பலவற்றில் எப்போதுமே ஆடு வளர்க்கக் கூடாது அல்லது ஆடு வளர்ப்பவரின் வேலி தாண்டி வரக்கூடாது.

இவையெல்லாம் எதற்கு?
நெல் சாகுபடியைப் பாதுகாப்பதற்கு!

ஆனால், தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு நெல் சாகுபடி செய்யும் விவசாயி கடனில் மூழ்கி நிலத்தை விற்க வேண்டியுள்ளது என்பதுதான் நிலை. விளை நிலங்கள் வீட்டு மனைகள் ஆக்கப்படும் வழக்கம், நெல் விவசாயம் செய்யப்படும் பகுதிகளில்தான் அதிகமாக உள்ளது என்பதைக் கவனித்துப் பார்த்தால் உண்மையின் சூட்டை உணர முடியும்.

மக்களின் பொது உணவாக அரிசி மாறிவிட்டதால், போதுமான அரிசி உற்பத்தி அளவைத் தமிழகத்தால் எட்ட முடியவில்லை. இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் அதிக அரிசியைத் தமிழகத்தில் இறக்குகின்றன.

இந்த மாநிலங்களில் எல்லாம், அரிசி மட்டுமே உண்ணும் மூடத்தனம் இல்லை. சான்றாக, பெங்களூரில் கூட ராகி முத்தே எனப்படும் கேப்பைக் கூழ் உருண்டை தாராளமாகக் கிடைக்கிறது. கிராமங்களுக்குச் செல்லச் செல்ல இந்தப் பழக்கம் கம்பங்களி, வரகுச் சோறு, தினைச் சோறு, சாமைச் சோறு என அதிகரிப்பதைக் காண முடியும். ஆந்திராவிலும் இதே நிலைதான்.
இதனால்தான் அவர்களால் தமிழ்நாட்டுக்கு அரிசி விற்க முடிகிறது.

நம் கிராமங்களோ, ஒரு ரூபாய் அரிசி இல்லாவிட்டால் பட்டினிச் சாவு என்ற அபாயத்தை நோக்கிச் சென்றுவிட்டன. இது மிகையல்ல, முழு உண்மை!

நெல் சாகுபடியின் வரவு – செலவுக் கணக்கைப் பார்ப்போம்.

ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்குக் குறைந்தளவுச் செலவு ரூ.25 ஆயிரம் ஆகும். இது, விவசாயம் செய்பவருடைய உழைப்பைக் கணக்கிடாத செலவு ஆகும். விவசாயி தன் குடும்பத்தினருடன் இணைந்து உழைத்துதான் பயிரிடலில் ஈடுபடுகிறார்.
விதை, கூலியாகக் கொடுக்கும் பணம், பூச்சிக் கொல்லிகள் மற்றும் இரசாயன உரங்களுக்கான செலவு ஆகியவற்றை மட்டும் கணக்கில் கொண்டு மேற்கண்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு ஏக்கர் விளைச்சல் சராசரியாக – 30 மூட்டைகள்.

அதிக விலை மதிப்பு கொண்ட பொன்னி ஒரு மூட்டை ரூ.1050
குறைந்த விலை மதிப்பு கொண்ட வகைகள் ஒரு மூட்டை – ரூ 450
(கோ 43, குச்சி நெல் உள்ளிட்டவை)

இந்தக் கணக்கின்படி,
ஒரு ஏக்கருக்கு-
அதிகளவு வருமானமாக ரூ. 31,500
குறைந்தளவு வருமானமாக ரூ.13,500
கிடைக்கிறது.

குறைந்த விலை மதிப்புள்ள வகை நெல் பயிரிடலில் விதை விலை மட்டுமே குறையும். மற்றச் செலவுகள் குறையாது. அதேவேளை பொன்னி உள்ளிட்ட அதிக விலை மதிப்புள்ள நெல் வகைகள் பராமரிக்கக் கடினமானவை. ஆகவே, அவற்றின் செலவு மேற்கண்ட சராசரிச் செலவைக் காட்டிலும் கூடுதலாகும். இவ்வகை நெல் வகைககள் அதிக வெப்பம், அதிக மழை ஆகிய இரு சூழல்களையுமே தாங்காதவையாகும். இதற்கேற்ப, வெப்பம் மிகுந்தால் நீர் பாய்ச்சிக் கொண்டேயிருக்க வேண்டும். மழை வெள்ளம் வந்தால், மழையில் நனைந்துகொண்டாவது மிகை நீரை வெளியேற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

இவை தவிர, நோய் தாக்குதல், விதை பழுது காரணமாக விளைச்சல் குறைதல், ஆள் பற்றாக்குறை / கூலி உயர்வு காரணமாக பராமரிக்க இயலாத நிலை உள்ளிட்ட எண்ணற்ற காரணிகள் செயல்படுகின்றன. இவ்வளவையும் மீறி விளைவிக்கப்படும் நெல்லுக்குத்தான் மேற்கண்ட விலை!

ஆக, கணக்கிட்டுப் பார்த்தால் நெல் விவசாயம் என்பது இழப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்பதே உண்மை. இதனால்தான் நெல் விவசாயம் செய்யப்படும் பரப்பு நம் கண்ணெதிரே குறைந்துகொண்டே வருகிறது. ஆனால், அரசு கொடுக்கும் புள்ளிவிவரங்களோ தலைகீழானவை. உற்பத்தி உபரியாக உள்ளது என்கிற விததில்தான் ஒவ்வொரு முறையும் அரசு அறிவிக்கிறது.

இனி...நெல் அரிசியாக் மாறும் நிலையில் உள்ள கணக்குகளைப் பார்ப்போம்!

ஒரு மூட்டை நெல் 62 கிலோ ஆகும். இதில் சாக்கு எடை என 2 கிலோ வியாபாரிகளால் கழிக்கப்படும். உண்மையில் சாக்கின் எடை 1 கிலோவுக்கும் குறைவே!

60 கிலோ நெல் அரைத்தால் 35 -40 கிலோ அரிசி கிடைக்கும். இதன் சராசரி அளவாக 37 கிலோவைக் கணக்கிற்கு எடுத்துக்கொள்ளலாம்.


இதற்கான செலவுகள்:

ஒரு மூட்டைக்கு-
அவித்து அரைக்கும் கூலி –ரூ 35
மூட்டை தூக்குவோர் கூலி –ரூ 5
மொத்தச் செலவு ரூ.40/

அரைக்கும்போது கிடைக்கும் பொருட்களின் மதிப்பு:
குருணை 2 கிலோ – ரூ. 30
தவிடு 21 கிலோ - ரூ. 110
(கிலோ 5ரூபாய்)
மொத்த மதிப்பு ரூ. 140/

ஆக,
நிகர வருவாய் ரூ.100/
(ரூ140-ரூ.40)

இந்த வருவாய் (ரூ.100) ஒருபோதும் விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. அரசு கொள்முதல் செய்யும்போதும் தனியார் கொள்முதல் செய்யும்போதும் இந்த வருவாய் பற்றி வாய் திறப்பதே இல்லை.
தவிடு விற்பனை இன்று மிகப் பெரிய வணிகமாகும்.
கால்நடைத் தீவனங்கள் தயாரிப்புக்கு தவிடு அதிகமாகத் தேவைப்படுகிறது. இது மட்டுமல்ல, தவிட்டிலிருந்து எண்ணெய் எடுக்கும் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்குத் தவிடு ஆயிரக்கணக்கான டன்கள் விற்கப்படுகின்றன. தவிட்டு எண்ணெய் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக பல நூறு கோடிகளைக் குவிக்கிறது. இந்த வருவாய்களில் இருந்து ஒரு பைசா கூட நெல்லை விவசாயம் செய்தவருக்குக் கிடைப்பதில்லை.

இதைவிடக் கொடுமை, இப்படியெல்லாம் வருவாய் வருகிறது என்ற உண்மைகூட விவசாயிகளுக்குத் தெரிவதே இல்லை.

அரிசி விலையின் அதிசயக் கணக்குகள்:

மேலே கண்ட கணக்குகளின்படி ஒரு மூட்டை அரிசி ரூ.1050 என்ற விலைக்கு வாங்கப்படுகிறது. அரவையின் போது கிடைக்கும் உபரி வருவாயான ரூ.100ஐக் கழித்துவிட்டால், நிகரக் கொள்முதல் விலை ரூ.950/ஆகும்.

இம்மூட்டையிலிருந்து குறைந்தளவு 35கிலோ அரிசி கிடைக்கிறது.
அதாவது ஒரு கிலோ அரிசியின் மதிப்பு ரூ.27/-

இந்த அரிசிதான் கடைகளில் ரூ.35 முதல் ரூ.40வரையும், பொருளாதார மந்தம் என்ற பெயரில் சில வேளைகளில் ரூ.45 என்ற விலைக்கும் விற்கப்படுகிறது.

குறைந்தளவு விலையான ரூ.35ஐ எடுத்துக்கொள்வோம்.
ஒரு மூட்டை நெல்லின் கணக்கு எப்படி மாறுகிறதெனப் பார்ப்போம்.

ஒரு மூட்டை நெல்லில் கிடைக்கும் அரிசி மதிப்பு – ரூ.35 * 35கிலோ =ரூ.1225/-

அரிசி விற்பனை மதிப்பு ரூ. 1225
அரவையில் கிடைக்கும் மதிப்பு ரூ.100
மொத்த வருவாய் –ரூ.1325/-
(-)
விவசாயிக்கு வழங்கப்படும் விலை ரூ.1050

நிகர ஆதாயம் = ரூ. 275/

ஒரு மூட்டையில் வணிகர்களுக்கும் இடைத் தரகர்களுக்கும் ஆலை முதலாளிகளுக்கும் கிடைக்கும் ஆதாயம் ரூ.275/

வணிகர்களும் முதலாளிகளும் தங்கள் செலவினங்களையும் முதலீடுகளுக்கான பங்குகளையும் கழித்துப் பார்த்தால்கூட, இத்தொகை அவர்களுக்குக் கொள்ளை ஆதாயத்தையே தருகிறது.

இந்த வணிகத்தின் அடிப்படைக் காரணியான விவசாயி கணக்குப் பார்த்தால், மூட்டைக்கு 1 ரூபாய் ஆதாயம் கூடக் கிடைப்பதில்லை என்பதே உண்மை.

இதே நிலை நீடித்தால், விவசாயிகள் நெல் பயிரிடுவதைக் குறைத்துக்கொள்வார்கள். இதனால், தமிழக உணவுத் தேவையைச் சமாளிக்கப் பேரளவு பிற நாடுகளையும் மாநிலங்களையும் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். விலை ஏற்றம் விண்ணைத் தொடும்.

இன்னும் இரு ஆண்டுகளில் அரிசியின் குறைந்தளவு விலை ரூ.30 ஆகிவிடும் வாய்ப்பே அதிகம். அதிகளவு விலை (பொன்னி வகைகள்) ரூ.50ஐத் தாண்டிவிடும்.

இவை தவிர, கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு, பட்டினிச் சாவுகள் நடக்கும் அபாயத்திற்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. இக் கட்டுரையைப் படிக்கும் நீங்கள் உணர வேண்டிய செய்தி இதுதான்;
’விவசாயிகள் பட்டினி கிடக்கும்போது கண்டுகொள்ளாத சமூகம் ஒருவேளை உணவுக்கும் வழியின்றிச் சாகும்’

1 comment:

  1. excellent calculations. I can feel the pain of our farmers ’விவசாயிகள் பட்டினி கிடக்கும்போது கண்டுகொள்ளாத சமூகம் ஒருவேளை உணவுக்கும் வழியின்றிச் சாகும்’ it's true statement. we have to do something

    ReplyDelete