
மத்தாப்புச் சிதறல்களில்
முகாம் குழந்தைகளின்
குருதிச் சிதறல்கள்
தெரியவில்லை என்றால்...
சரவெடிகளின்
இணைப்பு நூல்களைப் பார்க்கும்போது
முள் வேலியின்
சாயல் தெரியவில்லை என்றால்...
பூச்சட்டியின்
தீச் சுடர் மேலே
எழும்பி சாம்பலாய்
இறங்கும்போது
எரிந்த
எம் மக்களின்
பிண வீச்சம்
வீசவில்லை என்றால்...
நரகாசுரனைக் கடவுள் அழித்தாரென்ற
கதை கேட்கும்போது
வெள்ளைக் கொடியேந்திய
எம் தளபதிகள்
செங்குருதியில் மிதந்த
காட்சி கண்ணில் வரவில்லை என்றால்...
இனிப்புகள் பரிமாறிச்
சுகிக்கும்போதெல்லாம்...
பாலில்லா முலையில்
குருதி வழிய...
நா வறண்ட
எம் பிஞ்சுகள்
கதறும் ஓசை
உங்கள் காதுகளில்
விழவே இல்லை என்றால்...
உங்களுக்கு
என்
தீபாவளி வாழ்த்துகள்!
No comments:
Post a Comment